வேலூர் அரக்கோணம் அருகே திருமால்பூரில் மணல் கடத்தல்-ஆய்வாளர் மீது தாக்குதல்



மணல் கடத்தலைத் தடுக்கச் சென்ற வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட 5 பேரை, 10 பேர் கொண்ட கும்பல் தாக்கிய சம்பவம் வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே திருமால்பூரில் நிகழ்ந்துள்ளது.
     அங்குள்ள பாலாற்றில் 2 லாரிகளில் 10 பேர் கொண்ட கும்பல் மணல் கடத்தலில் ஈடுபட்டுள்ளனர். இதனையறிந்து அரக்கோணம் வருவாய் ஆய்வாளர் ராஜராஜசோழன், பள்ளூர் கிராம நிர்வாக அலுவலர் சரவணன், கிராம நிர்வாக உதவியாளர்கள் பஞ்சமூர்த்தி, செல்வராஜ், முனுசாமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளார். அப்போது அவர்கள் 5 பேரையும் மணல் கடத்தலில் ஈடுபட்ட கும்பல் உருட்டுக்கட்டைகளால் தாக்கியுள்ளது.
    மேலும், வருவாய் ஆய்வாளரிடம் இருந்த பணம், செல்போன், ஏடிஎம் கார்டுகளையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். கடந்த ஒரு மாதத்தில் 40 மணல் கடத்தல் சம்பவங்களை ராஜராஜசோழன் தடுத்து நிறுத்தி உள்ளார்.
    இதனால் ஆத்திரமடைந்தவர்கள் திட்டமிட்டே இந்த தாக்குதலை நடத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள அரக்கோணம் போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் நடைபெற்ற சம்பவம் போலவே தூத்துக்குடி மாவட்டம் வள்ளநாடு அருகே மணல் கொள்ளையை தடுக்க முயன்ற தாசில்தார் மீதும் லாரி ஏற்ற  முயற்சி நடந்துள்ளது. 
   திருவைகுண்டம் தாசில்தார் நேற்று நள்ளிரவு ரோந்து பணியில் ஈடுப்படிருந்தபோது, தாமிரபரணி ஆற்று பாலத்தின் அருகே இரண்டு டிப்பர் லாரிகளில் மணல் கடத்தியவர்களை பிடிக்க முயற்சி மேற்கொண்டார்.
    அப்போது அவர்கள் டிப்பர் லாரியை அவர் மீது மோதி தாசில்தாரை கீழே தள்ளிவிட்டு தப்பியோடி விட்டனர். இந்த சம்பவம் முறப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
                            -இணைய செய்தியாளர் - வலசை விவேக்