கடுமையாக பாதிப்பு - அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்
பெரம்பலூர் மாவட்டத்தில் போதிய மழை இல்லாததால் மக்காச்சோளம் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் காய்ந்து போன பயிர்களை கால்நடைகளுக்கு தீவனமாக போட வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
வானம் பார்த்த பூமியான பெரம்பலூர் மாவட்டத்தில் மானவாரி பயிர்களான மக்காச்சோளம், பருத்தி உள்ளிட்டவைகள்தான் பெருமளவில் பயிரிடப்படுகின்றன. மக்காச்சோளம் பயிரிடுவதில் பெரம்பலூர் விவசாயிகள் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அதனால், பெரம்பலூர் மாவட்டம் மக்காச்சோளம் விளைச்சலில், மாநில அளவில் முதலிடம் பிடித்து வருகிறது. நடப்பாண்டில், சுமார் 46 ஆயிரத்து 54 ஹெக்டேர் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் பெரும் இழப்பை சந்தித்த விவசாயிகள், தற்போதும் கடும் ஏமாற்றத்தை சந்தித்துள்ளனர். இதுவரை சரியான மழைப்பொழிவு இல்லாததால், நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் முற்றிலும் காய்ந்து, சருகுப்போல் நிற்பதால், விவசாயிகள் வேதனைக்கு ஆளாகியுள்ளனர்.
இதனால் ஏக்கர் ஒன்றிற்கு 6 ஆயிரம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதால் அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று மக்காச்சோளம் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.