ஆந்திர மாநில சித்தூர் அருகே பதுங்கியிருந்த தீவிரவாதிகள் கைது

thagaval pasumai nayagan
   


     தமிழகத்தையொட்டிய ஆந்திர மாநில பகுதியான சித்தூர் அருகே வீட்டிற்குள் பதுங்கியிருந்த பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகிய இரண்டு தீவிரவாதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ளவர்களுக்கு மருத்துவ சிசிக்சை அளிக்கப்பட உள்ளதால், அவர்கள் இருவரும் ஆம்புலன்சில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

     சென்னையில் நேற்று பிடிபட்ட தீவிரவாதி போலீஸ் பக்ருதீன் அளித்த தகவலின்படி, சித்தூர் மாவட்டம் புத்தூரில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த வீட்டை காவல்துறையினர் இன்று காலை சோதனையிட முயன்றனர். ஆந்திர காவல்துறையினரின் உதவியுடன் தமிழக காவல்துறையினர் இந்த நடவடிக்கையில் இறங்கினர்.

      இன்று அதிகாலை 3 மணிக்கு அந்த வீட்டை திறக்க முயற்சித்த தமிழக காவல்துறையைச் சேர்ந்த 2 காவலர்களை, தீவிரவாதிகள் தாக்கினர். இதையடுத்து தீவிரவாதிகள் பதுங்கியிருந்த வீட்டை இருமாநில காவல்துறையினரும் சுற்றி வளைத்தனர்.

    இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். இதனையடுத்து தீவிரவாதிகளுடன் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, வீட்டின் உள்ளே இருந்த 3 குழந்தைகள் உள்ளிட்ட 4 பேர் மீட்கப்பட்டனர். பின்னர் சரணடைந்த பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

    காவல்துறையினருடனான சண்டையின் போது பன்னா இஸ்மாயிலுக்கு வயிற்றில் குண்டு காயம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 தீவிரவாதிகள் பதுங்கியிருந்த வீட்டில் இருந்த துப்பாக்கி, ஜெலட்டின் குச்சிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
                                                                                                 - வலசை விவேக்