நீண்டநாள் கோரிக்கை தீர்க்கப்படுமா? புதிய தலைமுறையின் கள ஆய்வு


     தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நிலவும் மக்கள் பிரச்னைகளை அலசுவதற்காக களமிறங்கியுள்ளது புதிய தலைமுறை. அதன்படி, முதற்கட்டமாக வேலூர் மாவட்டத்தில் நிலவும் அடிப்படை பிரச்சனைகளை ஆய்வு செய்துள்ளது புதிய தலைமுறையின் களஆய்வு குழு.
வேலூர் மாவட்டத்தின் முக்கியப் பிரச்சனைகள் என்ன? அதனை தீர்ப்பதற்கு வழிமுறைகள் உள்ளதா?

புதிய தலைமுறையின் கள ஆய்வு:
தமிழகத்தில் மற்ற மாவட்டங்களோடு ஒப்பிடும் போது வேலூர் மாவட்டம் பரப்பளவில் பெரிய மாவட்டமாக இருக்கிறது. இந்த மாவட்டத்தில் திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர் போன்ற பல பெரிய தொழில்நகரங்கள் இருந்தாலும் மாவட்டத்தின் முக்கிய அரசு அலுவலகங்கள் அனைத்தும் வேலூரில் தான் இருக்கின்றன. எனவே இப்பகுதிகளில் இருக்கும் மக்கள் அரசு அலுவல்கள் ஏதாவது முடிக்க வேண்டும் என்றால் ஒரு நாள் முழுவதும் செலவு செய்து, ரூ.200 வரை பயணச் செலவு செய்தும் தான் அந்த வேலையை முடிக்க வேண்டிய நிலையில் இருக்கின்றனர். ரயில் சேவையை பெற வேண்டுமானால் வேலூர் நகர மக்கள் காட்பாடி ரயில் நிலையத்திற்கும், திருப்பத்தூர் நகர மக்கள் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கும் செல்ல வேண்டியிருக்கிறது.

பொதுமக்கள் மட்டும் அல்லாமல் அரசு அதிகாரிகளும் நிர்வாகச் சிக்கலை சந்தித்து வருகின்றனர். வேலூர் மாவட்த்தில் இருக்கக் கூடிய கிராமப் பகுதிகள் 843 வருவாய் கிராமங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஆனால் ஆவண காப்பகம், ரிஜிஸ்டர் ஆபீஸ் என முக்கிய அரசு அலுவலகங்கள் அனைத்தும் வேலூரில் தான் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் திருப்பத்தூர் நகரை தலைமையிடமாகக் கொண்டு ஒரு தனி மாவட்டம் உருவாக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கிறது. நிர்வாக ரீதியாக வேலூர் மாவட்டத்தை சீரமைக்க அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அண்மையில் திருப்பத்தூரில் புதிதாக 2 தாலுகாகளை அரசு அமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வேலூர் மாவட்டத்தை 2ஆக பிரிப்பது நிர்வாக ரீதியான தேவைகளை பூர்த்தி செய்வதை தாண்டியும் திருப்பத்தூர் நகரின் வளர்ச்சிக்கு அவசியமானது என்ற கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. 7 லட்சம் மக்கள் தொகை கொண்ட திருப்பத்தூரில் இதுவரை ஒரு அரசு கல்லூரி கூட இல்லை, அரசு மருத்துவமனையும் இல்லை. 100 கி.மீ., பயணம் செய்து தான் திருப்பத்தூர் நகர மக்கள் தரமான மருத்துவ வசதிகளை பெற வேண்டியிருக்கிறது. எனவே திருப்பத்தூரை தலைமையிடமாக கொண்டு ஒரு மாவட்டம் அமைக்கும் போது அடிப்படை வசதிகளுக்கான அனைத்து அம்சங்களும் கிடைக்கும் என்ற கோரிக்கை எழுகின்றது.
நீண்டநாள் கோரிக்கை தீர்க்கப்படுமா? 
தமிழகத்தின் மிகப் பெரிய மாவட்டம் என்ற பெருமை வேலூருக்கு இருந்தாலும், கடைக்கோடியில் உள்ள கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று வருவதில் சிரமங்கள் இருப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனால், நிர்வாக வசதிக்காக மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் 13 சட்டப் பேரவை தொகுதிகளையும், 2 நாடாளுமன்றத் தொகுதிகளையும் உள்ளடக்கிய வேலூர் மாவட்டம், ஏறத்தாழ 40 லட்சம் மக்கள் தொகை கொண்டது. இந்த மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 11 நகராட்சிகள், 22 பேரூராட்சிகள் உள்ளன. சுமார் 150 கிலோ மீட்டர் சுற்றளவில் பரந்து விரிந்துள்ள போதிலும், இந்த மாவட்டத்தின் கடைக்கோடியில் உள்ள கிராம மக்கள், எந்த ஒரு தேவைக்காகவும் ஆட்சியர் அலுவலகம் சென்று வருவதில் கடும் சிரமத்தை சந்திப்பதாக கூறுகின்றனர்.
நீண்ட தொலைவு பயணிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தங்களின் கல்வி வாய்ப்புகள் பாதிக்கப்படுவதாகவும் மாணவ, மாணவிகள் வேதனை தெரிவிக்கின்றனர். முக்கிய அரசு அலுவகங்கள், அரசு வேலை வாய்ப்பு அலுவலகம் போன்றவை வேலூரிலேயே அமைந்துள்ளதால், தங்களது வேலைவாய்ப்புகளும் பாதிக்கப்படுவதாகவும் மாணவர்கள் கூறுகின்றனர்.
ஒரு மாவட்டத்தின் ஆட்சியர் அலுவலகம் என்பது, அந்த மாவட்ட மக்களின் குறைகளை தீர்ப்பதாக இருக்க வேண்டும். ஆனால், அந்த அலுவலகம், பயணிக்க முடியாத வெகுதொலைவில் இருப்பதே, பெருங்குறையாக இருக்கிறது வேலூர் மாவட்ட மக்களுக்கு. எனவே, திருப்பத்தூரை தலைமையிடமாக கொண்டு, புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என்ற பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை, தற்போது மேலும் தீவிரமடைந்துள்ளது.
அரசு என்ன சொல்கிறது:
திருப்பத்தூரை தலைமையிடமாகக் கொண்டு ஒரு மாவட்டத்தை உருவாக்குவது குறித்து அரசு அதிகாரிகளிடம் புதிய தலைமுறை செய்தியாளர்கள் குழு கருத்து கேட்டது.
தொடர்ச்சியாக நிர்வாக ரீதியாக மாவட்டங்களை பிரிப்பதில் அரசு ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் திருப்பத்தூர் நகரின் உட்கட்டமைப்பை மேம்படுத்துவது, போக்குவரத்தை சீர்படுத்துவது, இணைப்புச் சாலைகள் அமைப்பது, திருப்பத்தூர் நகரத்தின் வெளியில் அரசு அலுவலகங்கள் அமைக்க இடம் பார்ப்பது ஆகிய பணிகள் முடிந்த பின்னர் வேலூர் மாவட்டத்தை இரண்டாக பிரித்து திருப்பத்தூர் மாவட்டம் உருவாக்க அரசு திட்டமிட்டிருப்பதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.